தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் கீழ நத்தம் காலனி தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிப்பவர்களுக்கு என்று தனி மயானம் உள்ளது. ஆனால் அந்த மயானத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல பெரிதும் சிரமமாக உள்ளது. மேலும் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நத்தம்காலனி தெரு.

ஏரியை ஆக்கிரமிக்கும் ஆகாய தாமரைகள்

அரியலூர் சித்தேரியில் அதிக அளவில் ஆகாய தாமரைகள் படர்ந்து வருகிறது. இதனால் இந்த ஏரியில் மழை பெய்யும்போது, போதுமான அளவு மழை நீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நல்லமுத்து, அரியலூர்.

கிடப்பில் போடப்பட்ட பணி

அரியலூர் தேரடி அருகே கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் பள்ளம் தோண்டப்படும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே பேரிக்காடு வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுதா, அரியலூர்.

கொசுத்தொல்லை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலை ஓரத்தில் திறந்தவெளி கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரத்தில் மக்களை தூங்க விடாமல் கடித்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் அருகே கோழி கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதினால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பூதலிங்கம், ஜெயங்கொண்டம்.


Next Story