தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் அண்ணா நகர் பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலையில் இருந்து குடியிருப்பு வீடுகளுக்கு செல்வதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்தார் சாலை போடப்பட்டது. தார் சாலை போடப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதால் தார் சாலை நெடுகிலும் முழுமையாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த தார் சாலை வழியாக நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாரதி கண்ணன், நொய்யல்.

பாலம் கட்ட வேண்டும்

கரூர் மாவட்டம் முத்தனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப் பாலத்தை பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திவந்தனர். பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்து அழுக்குத் துணிகளை துவைத்து வந்தனர். தங்களது கால்நடைகளான ஆடு, மாடுகளை ஓட்டி சென்று மேய்த்து வந்தனர். விவசாயிகள் விவசாய தோட்டங்களுக்கு இடுபொருட்களை வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்றும், விளைநிலங்களில் விளைந்த பொருட்களை வாகனங்கள் மூலம் எடுத்தும் வந்தனர். இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானதால் பாலம் மிகவும் சிதிலமடைந்தது. அதன் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பாலத்தை முழுமையாக இடித்துவிட்டனர். ஆனால் பாலத்தை இடித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த பாலம் மீண்டும் கட்டித்தரப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராதிகா, முத்தனூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் சின்னாண்டாங்கோவில் ரோடு பகுதியில் உள்ள பொன்வேல் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் உள்ள குப்பைகளை அகற்றி மீண்டும் அப்பகுதியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பொன்வேல் நகர்.


Next Story