தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், பலகாரக்கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் அதிகளவு பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், அழுகிய காய்கறிகள், அழுகிய பொருட்களை தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளையும் தார் சாலை ஓரத்தில் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து போட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சமூக ஆர்வலர்கள், புன்னம் சத்திரம்.

சாலையில் பள்ளம்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் வழியில் பொன்னியாகவுண்டன்புதூர் முதல் அதியமான்கோட்டை செல்லும் பிரிவு சாலை வரை 3 இடங்களிலும், அதேபோல் புன்னம்சத்திரம் பகுதியில் கரூர்-ஈரோடு செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ரோட்டின் இடது பக்கம் தார் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் இந்த பள்ளத்தில் இறங்குவதை தவிர்க்க ஒதுங்கி செல்கின்றன. அதன்காரணமாக எதிர்திசையில் வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இலக்கியா, கரூர்.

தூர்வாரப்படாத கால்வாய்

கரூர் மாவட்டம் ஒரம்புப்பாளையம் பகுதியில் தொடங்கி கவுண்டன்புதூர், செட்டி தோட்டம், செல்வநகர், முத்தனூர் வழியாக சென்று முத்தனூர் வழியாக செல்லும் புகளூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரி நீர் கால்வாய் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது. அதன் பிறகு புகளூர் வாய்க்காலின் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெரிய குளம் வெட்டப்பட்டது. உபரி நீர் கால்வாய் வழியாக வரும் தண்ணீர் இந்த குளத்தில் தேங்கி குளம் நிறைந்த பின் புகளூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரம்புப்பாளையம் முதல் முத்தனூர் வரை உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் வழியாக சென்று புகளூர் வாய்க்காலில் கலக்கிறது. அதேபோல் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்து இந்த கால்வாய் வழியாக செல்கிறது. உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் கால்வாய் நெடுகிலும் அவ்வப்போது ஏராளமான செடி கொடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நாகராஜன், ஒரம்புப்பாளையம்.


Next Story