தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒனறியம் ஒலியமங்கலத்தில் இருந்து காயாம்பட்டி வழியாக கொடும்பப்பட்டி வரை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஒலியமங்கலத்தில் இருந்து காயாம்பட்டி வரையும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டதன் காரணத்தினால் இந்த பஸ் இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது சாலை சரி செய்யப்பட்ட நிலையிலும் இதுவரை காயாம்பட்டிக்கு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் காயாம்பட்டியில் இருந்து ஒலியமங்கலம், சடையம்பட்டிக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் நடை பயணமாகவும், இருசக்கர வாகனத்திலும் செல்கின்றனர். எனவே காயாம்பட்டி வழியாக கொடும்பப்பட்டி வரை மீண்டும் டவுன் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கண்ணப்பன், காயாம்பட்டி.
சிதிலமடைந்த நிழற்குடை
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கைக்குறிச்சி கடை வீதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடை தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கைக்குறிச்சி கடைவீதி.
இயக்கப்படாத அரசு பஸ்களால் மக்கள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து அமர சிம்மேந்திரபுரம் வழியாக ரெட்டை வயல் செல்லும் 3-ம், 10-ம் நம்பர் அரசு பஸ்கள் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த பெண்கள் செல்லும் இலவச பஸ்களாக இருந்து வருவதால் மதிய நேரம் உள்ளிட்ட பல நேரங்களில் இப்பஸ்கள் வருவதில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள ஏழை-எளிய கூலித் தொழிலாளர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். தனியார் பஸ் வந்து சென்ற பிறகு அதன் பின் அரசு பஸ் வருகின்றது. இதனால் அரசு பஸ்சில் கூட்டம் குறைவாகவும், தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாகவும் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காலை, மாலை, இரவு நேரங்களில் தவறாமல் அரசு பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயணிகள், அறந்தாங்கி.
ஆபத்தான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு பாலன் நகரில் கல்யாண சுந்தரம் 2-ம் வீதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தீபாபிரபு, மருதுபாண்டியர் நகர்.