தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் குழாயில் உடைப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கணேசன், மணப்பாறை.
வெள்ளை வர்ணம் தீட்டப்படுமா?
திருச்சி நகரில் இருந்து குளித்தலை வழியாக கரூர், ஈரோடு, கோவை, ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட துறை மூலம் மேற்கொண்டனர். சாலை பராமரிப்பு முடிந்தவுடன் சாலையில் வாகனங்கள் செல்வதற்காக ஒளிரும் வெள்ளை வர்ண கோடுகள் சாலையின் ஒரு திசையில் அமைத்து மறு திசையில் அமைக்காமல் விட்டு விட்டார்கள். இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் சீரற்று செல்கிறது. குறிப்பாக குளித்தலையில் இருந்து பெட்டவாய்த்தலை, சிறுகமணி, பெருகமணி, மணவாசி, திருப்பராய்த்துறை முக்கொம்பு, ஜுயபுரம் உள்ளிட்ட சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கான தனி கோடுகள் அமைக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரவணன், புத்தனாம்பட்டி.
புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாநகராட்சி, கருமண்டபம் செல்வநகர் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதினால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, புதிதாக தார் சாலை அமைத்துள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், செல்வநகர்.
உடைந்த மின்கம்பம்
திருச்சி மாவட்டம் துவாக்குடி மாநகராட்சி டாக்டர் கலைஞர் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் உடைந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்துள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
லிங்கம், பெல்நகர்.
நோயாளிகள் அவதி
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, செவல்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையம் கடந்த 8 மாதங்களாக மாலை முதல் இரவு நேரங்களில் செயல்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற வேண்டும் என்றால் சுமார் 15 கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மதியழகன், செவல்பட்டி.