தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

சாலையோரம் நிற்கும் லாரிகள்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் முத்துவாஞ்சேரி சாலையில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்டு ஆலைக்கு தினமும் ஏராளமான சுண்ணாம்புகள் ஏற்றி வரும் லாரிகள், பல்கர் லாரிகள் மற்றும் நெய்வேலியிலிருந்து நிலக்கரி ஏற்றி வரும் லாரிகள் இதோடு அல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து குப்பைகளை ஏற்றி வரும் லாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த லாரிகள் எப்போதும் போக்குவரத்திற்கு இடையூராக முதன்மை சாலையில் இருபுறமும் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் வி. கைகாட்டி புறக்காவல் நிலையம் முதல் தனியார் சிமெண்டு ஆலை வரை தற்சமயம் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாற்றம் அடைந்து வயல் வெளியாக உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ரெட்டிப்பாளையம்.

கண்களை பதம் பார்க்கும் மண்

அரியலூர் மாவட்டம், அரியலூர்-ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலையில் பெரிய நாகலூர் பாலக்கரைக்கு மேற்கு பகுதியில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. அந்த பாலத்தின் இருபுறமும் அதிகளவில் மண்கள் தேங்கியுள்ளது. இவ்வழியே தினமும் எண்ணற்ற கனரக மற்றும் இதர கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் மின்னல் வேகத்தில் செல்வதால் பாலத்தின் மேல் பகுதியில் தேங்கியுள்ள மண்கள் காற்றில் பறப்பதால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் நிகழும் சூழல் உள்ளது. சில நாட்களில் இரவு நேரங்களில் இப்பகுதியில் மிகவும் மோசமான புழுதி மண்டலமாக உள்ளது. மேலும் இப்பகுதியில் எவ்வித மின்விளக்குகளும் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையாகவே உள்ளது. மேலும் காட்டு பிரிங்கியம், அஸ்தினாபுரம் ஆகிய கிராமங்களில் சாலையின் இருபுறமும் அதிகளவில் மண்கள் தேங்கியும் சில இடங்களில் வெள்ளை நிற பட்டைகளை மறைத்து மண் மேடுகளாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், வி.கைகாட்டி.

ஏரியில் முளைத்துள்ள கருவேல மரங்கள்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வானதிரையன்பட்டிணம் கிராமத்தில் குமிளங்குழி ஏரியை சுற்றிலும் கருவேல மரங்கள் அதிக அளவில் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் ஆடு, மாடுகள் கருவேல மரங்களில் சிக்கிக்கொள்கின்றன. மேலும் மழைபெய்யும்போது மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அருள், வாணதிரையன்பட்டணம்.

சாலை ஆக்கிரமிப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறையில் அம்பேத்கர் சிலை முதல் அரசு மருத்துவமனை வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் செல்லவும் பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரமேஷ், செந்துறை.


Next Story