தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

விபத்தை தடுக்க வேண்டும்

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை சேலம்-கரூர், கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த பாலம் அமைக்கும் பணி முடிக்கப்பட்ட நிலையில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாலத்துறை பகுதிக்கு செல்ல முடியாதபடி வழி நெடுகிலும் இரும்பு தடுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொடுமுடி பகுதிக்கு செல்லும் அனைத்து அரசு, தனியார் பஸ்களும், லாரிகளும், கார்களும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள்ள மேம்பாலம் வழியாக வேலாயுதம்பாளையம் சென்று கொடுமுடி பகுதிக்கு செல்கிறது. இதனால் பாலத்துறைக்கு எதிரே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்களில் வரும் பயணிகள் சர்வீஸ் சாலை அருகே இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடந்து பாலத்துறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதேபோல் பாலத்துறையில் இருந்து வேலாயுதம்பாளையம் வரை உள்ள பொதுமக்கள் கொடுமுடி, ஈரோடு, கோவை பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வராததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே பாலத்துறை வழியாக கொடுமுடி பகுதிக்கு அனைத்து பஸ்களும் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரஞ்சிதா, கொடுமுடி.

ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதி வழியாக இரும்பு பாதை செல்கிறது. இந்த இரும்பு பாதை வழியாக ஏராளமான சரக்கு, அதிவேக விரைவு பயணிகள், ரெயில் சாதாரண பயணிகள் ரெயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் ரெயில்வே பாதை அருகே உள்ள நாடார்புரம் மற்றும் காந்தி நகர் பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் வசித்துவருபவர்கள் இந்த ரெயில்வே பாதையை கடந்து தான் மரவாபாளையம் வரவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் சில நேரங்களில் ரெயில்வே பாதையை கடக்கும் போதும் அதிவிரைவு ரெயில் வரும்போது விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஷீலா, மரவாபாளையம்.

பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குளத்துப்பாளையத்திலிருந்து வேட்டமங்கலம் செல்லும் சாலையில் உள்ள உபரிநீர் கால்வாயின் குறுக்கே இருந்த பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாலம் கட்டும் பணி கால தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். இந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் தவிர பெரிய வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மணிவாசகம், குளத்துப்பாளையம்.

பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்- கொடுமுடி செல்லும் சாலையில் உள்ள நொய்யல் ரெயில்வே கேட் அருகே குடியிருந்து வரும் பொதுமக்களின் நலன் கருதி அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி வைக்கப்பட்டு அதிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்த காரணத்தால் மின்மோட்டாரை பழுது நீக்க எடுத்துச் சென்றனர். அதன் பிறகு மின்மோட்டார் பொருத்தப்படவில்லை. அதன் காரணமாக பல ஆண்டுகளாக நீர்த்தேக்க தொட்டி பயனற்று வீணாகி வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுந்தரமூர்த்தி, வேலாயுதம்பாளையம்.


Next Story