'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
விருதுநகர் மேலத்தெரு பெரியாண்டவர் கோவில் எதிரே உள்ள சாலையில் பாதாள சாக்கடை பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் கவனத்துடன் செல்லாவிட்டால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த பாதாள சாக்கடை பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயசந்திரன், விருதுநகர்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் தெருக்களில் நோய் தொற்றுடன் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. எனவே நோய் தாக்கிய தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி 15 -வது வார்டு எஸ்.என்.ஜி. பெண்கள் பள்ளியின் எதிரில் குப்பைகள் பல நாட்களாக குவிந்து கிடக்கிறது.எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்ராஜன், திருத்தங்கல்.
வேகத்தடை வேண்டும்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் எம்.புதுக்குளம் சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர். எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், எம்.புதுக்குளம்
பொதுமக்கள் அவதி
சாத்தூரில் இயக்கப்படும் சில மினி பஸ்கள் மருத்துவமனை மற்றும் பள்ளிகள் இருந்தும் அதிக ஹாரன் சத்தத்துடனும் வேகமாகவும் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் அடைகிறார்கள். இதை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிப்பார்களா?
பொதுமக்கள், சாத்தூர்.
சாலை சீரமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் அப்பயநாயக்கன்பட்டி புதுப்பட்டியில் இருந்து கோல்வார்பட்டி செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. எனவே இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் விரைவாக சீரமைக்க வேண்டும்.
முருகன். விருதுநகர்.