'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இந்த நாய்கள் சில நேரங்களில் அப்பகுதி மக்களை கடித்து விடுகிறது.. எனவே அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், பேரையூர்,

நடவடிக்கை தேவை

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பகல் நேரங்களிலும் எரிகிறது. இதனால் அரசுக்கு வீண் மின்சார செலவு ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் தேவையில்லாமல் மின் விளக்குகள் எரிவதை தடுத்து மின் சிக்கனம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேம், மதுரை.

நோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்தொற்றுக்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துகாளை, கோட்டைமேடு,

பொதுமக்கள் அவதி

மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன. இரவு நேரங்களில் சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பயமுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கே பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் இந்த நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

குமார், அவனியாபுரம்,

புதிய பாலம் அமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தர்மாசனம்பட்டி கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாலம் தரைமட்டமாக காணப்படுவதால் இந்த பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் செல்வதற்கு வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துவிடுகிறது. மேலும் கிராமத்தில் உள்ள கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய பாலம் அமைக்கவும், கண்மாயை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம், மேலூர்,


Related Tags :
Next Story