'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொதுமக்கள் சிரமம்
மதுரை கட்ராபாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குடியிருப்பு பகுதியின் நடுவே மின்கம்பத்தை அமைத்து உள்ளனர். இதனால் அவ்வப்போது மின்சார வினியோகம் பாதிக்கப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை அகற்றிட வேண்டும்.
சிலம்பரசன், கட்ராபாளையம்.
பள்ளம் மூடப்படுமா?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம், விராலிப்பட்டி ஊராட்சி தெற்குத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் பணி முடிந்த பிறகும் மூடப்படவில்லை. இதனால் இந்த பள்ளத்தில் மழைநீரானது தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் தோண்டிய பள்ளத்தை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தோஷ், விராலிப்பட்டி.
விபத்து அபாயம்
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம், துள்ளுக்குட்டிநாயக்கனூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி கிடையாது. இதனால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் தினமும் சிறு, சிறு விபத்தில் சிக்குகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
அவன், துள்ளுக்குட்டிநாயக்கனூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை வில்லாபுரம் அருகே புதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனை எதிர்புறம் செல்லும் சாலையில் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும். முத்துவேல், மதுரை.
தெருவிளக்கு வேண்டும்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாவினிப்பட்டி ஊராட்சி கூத்தப்பன்பட்டி கிராமம் 8-ம் வார்டு கிழக்கு தெருவில் தெருவிளக்கு வசதி கிடையாது. இரவு நேரங்களில் இருட்டை பயன்படுத்தி நடைபெறும் குற்ற சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
ராஜேஷ் குமார், கூத்தப்பன்பட்டி.
குடிநீரில் கழிவுநீர்
மதுரை வில்லாபுரம் 90-வது வார்டு மீனாட்சி நகர் வைத்தீஸ்வரன் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக இந்த குழாயிலிருந்து குடிநீரானது கழிவுநீருடன் கலந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இதனை சரிசெய்ய வேண்டும்.
ரவீந்திரநாத், வில்லாபுரம்.