'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை மாநகராட்சி 12-வது வார்டு மேலசிந்தாமணி கொசமேட்டுத் தெரு முத்து மாரியம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது பணி முடிந்து வெகு நாட்கள் ஆகியும் மண் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
மோசமான சாலை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா மேலக்கால் ஊராட்சி கீழ் மட்டையான் கிராமத்தில் தார் சாலை மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. குறிப்பாக கீழமடையான் மந்தையில் இருந்து பஸ் நிலையம் வரை உள்ள சாலை வாகனஓட்டிகள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்பகுயில் ரேஷன்கடை போன்றவை உள்ளதால் இங்குவருவோர் மிகுந்த சிரமத்துடனே வந்து செல்கின்றனர்.எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாராஜன், வாடிப்பட்டி.
பாலம் அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சந்தையூர் கிராமத்திற்கு உட்பட்ட எஸ். மேலப்பட்டி பெருமாள் கோவில் தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லை. இதனால் நீரோடை வழியாக சென்று உடலை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. எனவே ஓடையின் குறுக்கே பாலம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவஞானம், பேரையூர்.
நோய் பரவும் அபாயம்
மதுரை மாவட்டம் மேலூர் கோட்டநத்தம்பட்டி விவசாய பாசன கால்வாயில் கழிவுநீர் தேக்கமடைந்து கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுவதால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயினை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம்குமார், மேலூர்.
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா துள்ளுக்குட்டிநாயக்கனூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி கிடையாது. இதனால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் தினமும் சிறு, சிறு விபத்தில் சிக்குகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
ரகுபதி, பேரையூர்.