'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

கண்மாய் மடை சரிசெய்யப்படுமா?

மதுரை மாவட்டம் நல்லியத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள ஆத்தனூர் கரிசல்குளம் கண்மாயில் உள்ள மடைபகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கண்மாய் பகுதிக்கு தண்ணீர் சரிவர வருவதில்லை. எனவே கண்மாயின் மடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூபதி, நல்லியத்தேவன்பட்டி.

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் கோவில்பாப்பாக்குடி ஊராட்சிக்குட்பட்ட அழகர்நகர் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் தெருவில் விளையாடும் குழந்தைகளை கடிக்கின்றன. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சக்திவேல், கோவில்பாப்பாக்குடி.

சாலை வசதி வேண்டும்

மதுரை எஸ்.எஸ் காலனி நண்பர்கள் முதல் தெரு பகுதியில் சாலை வசதி செய்யப்படவில்லை. மேலும் மழைகாலங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகராஜன், மதுரை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

மதுரை மாநகர் செல்லூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள சிவன் தெருவில் குப்பை தொட்டி நிரம்பி குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனிதா, மதுரை.

சேதமடைந்த சாலை

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் தனியார் பள்ளி எதிரில் உள்ள ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

குமார், மதுரை,


Related Tags :
Next Story