'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதி
ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி, மைதானம், நூலகம் போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. இதனால் இப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகர், இருமேனி.
பொதுமக்கள் அச்சம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் வாகனங்களையும் துரத்துகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கீழக்கரை.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் நகர் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர்.எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவலிங்கம், ராமநாதபுரம்.
கண்மாய் தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பயிர் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு உள்ள சில கண்மாய்கள் தூர்வாரப்படாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வாரி விவசாய பணிகள் நடக்க தயார்படுத்த வேண்டும்.
பெஸ்டின், சாயல்குடி,
பள்ளத்தில் டிரான்ஸ்பார்மர்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று சாய்ந்த நிலையில் பள்ளத்தில் அமைந்துள்ளது. இதனால் இது அமைந்துள்ள சாலையை பயன்படுத்த முடியாமல் வாகனஓட்டிகள், சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.அந்தோணி, ஆர்.எஸ்.மங்கலம்.