'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நுழைவு வாயில் பகுதியில் சிலர் ஆங்காங்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் பஸ்கள் உள்ளே செல்வதற்கு காலதாமதம் ஆகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.
செந்தில், மதுரை.
பொதுமக்கள் அச்சம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருமங்கலம்.
நடவடிக்கை எடுப்பார்களா?
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ரேஷன் கடையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரேஷன்கார்டுதாரர்களுக்கு சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அவ்வப்போது கிடைக்காத நிலை ஏற்படுகிறது. எனவே தட்டுப்பாடின்றி அனைத்து பொருட்களும் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணபிரான், தென்கரை.
குண்டும்-குழியுமான சாலை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் இருந்து மேலூர் செல்லும் நான்கு வழி சாலை சேதமடைந்து குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுந்தர்ராஜ், ஒத்தக்கடை.
பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
மதுரை கிழக்கு மீனாம்மாள்புரம் மெட்ரிக் பள்ளி அருகில் சாலை, பாதாள சாக்கடை, கண்மாய் சீரமைப்பு, குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் ஆரம்பித்து வருடங்கள் ஆன நிலையில் இன்னும் நிறைவடையாத நிலை நிலவுகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோமலதா, மீனாம்பாள்புரம்.