பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 23 Sep 2022 7:30 PM GMT (Updated: 23 Sep 2022 7:30 PM GMT)

புகாா் பெட்டி

ஈரோடு

போக்குவரத்துக்கு இடையூறு

கோபியில் கிருஷ்ணன் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி சந்திக்கும் பகுதியில் பாலம் மோசமாக இருந்தது. இதைத்தொடர்ந்து பாலம் செப்பனிடப்பட்டது. எனினும் பாலம் ரோட்டில் இருந்து சிறிது மேடாக உள்ளது. அதுமட்டுமின்றி பாலம் அமைக்கப்பட்ட இடத்தின் அருகில் மண் மற்றும் கற்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பாலத்தின் மட்டத்துக்கு ரோட்டை சீரமைப்பதுடன், அங்குள்ள மண் மற்றும் கற்கள் குவியலை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

கரடு முரடான சாலை

கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் மின் நகருக்கு செல்லும் ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டின் தொடக்கப்பகுதி கற்கள் பெயர்ந்து கரடு, முரடாகவும், சற்று மேடாகவும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த ரோட்டின் வளைவில் இரு சக்கர வாகனங்கள் திரும்பும்போது சறுக்கி விடுகின்றன. இதனால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே அந்த ரோட்டை சீரமைத்து தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

மரம் அகற்றப்படுமா?

கோபியில் அரசு மருத்துவமனைக்கு எதிரில் ஒரு ரோடு செல்கிறது. அந்த ரோட்டின் முடிவில் வெட்டப்பட்ட மரத்தின் பாகம் மற்றும் அதன் காய்ந்த கிளைகள் கிடக்கின்றன. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது ஒன்றுக்கொன்று விலக முடியாத அளவுக்கு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே மரத்தின் பாகம் மற்றும் அதன் கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

குழியை மூடவேண்டும்

மொடக்குறிச்சி குன்னகாட்டு வலசு பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழி மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த குழியில் தண்ணீர் தேங்கி நிற்பதும், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மொடக்குறிச்சி.

பன்றிகள் தொல்லை

ஈரோடு காசிபாளையம் நேதாஜி வீதியில் பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பகுதியில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது அவைகள் ஓடிவந்து குறுக்கே விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த வீதி வழியாக செல்லும் பள்ளி மாணவ- மாணவிகளும் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். எனவே பன்றி தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காசிபாளையம்.

ஆபத்தான குழி

பவானி கூடுதுறை பாலத்தில் உள்ள ரோட்டில் குழி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். சிலர் கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது. ஆகவே ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், பவானி.

பஸ் வசதி வேண்டும்

அந்தியூரில் இருந்து அத்தாணி வழியாக கோபிக்கு காலை 6.30, 7 மணிக்கு டவுன் பஸ்கள் செல்கிறது. அதற்கு மேல் 8.55 மணி வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. அடுத்த டவுன் பஸ் 9 மணிக்கு வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 7.30 மணிக்கு மேல் 8 மணி, 8.30 மணிக்கு டவுன் பஸ்கள் இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்.



Next Story