தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கொசுக்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசுக்கடியால் முதியோர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
முனியாண்டி, ஆலங்குளம்.
கூடுதல் பஸ் வசதி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து இருக்கன்குடிக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். திருவிழா காலமாக இருப்பதால் இப்பகுதிகளுக்கு இடையே அதிகமானோர் பயணிக்கின்றனர். எனவே பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
தங்கராஜ், சாத்தூர்.
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் தெற்கு ரத வீதி சங்கிலி கருப்பசாமி கோவில் அருகில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையில் இருந்து விடுபட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயச்சந்திரன், விருதுநகர்.
கழிவறை வசதி வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராமத்தில் செயல்பட்ட கழிவறை கட்டிடம் கால்நடை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக வேறு கழிவறை வசதி செய்து தரப்படவில்லை. கழிவறை வசதி இல்லாததால் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கழிவறை வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.
பொதுமக்கள், ஆமத்தூர்.
நூலகம் திறக்கப்படுமா? (
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெரியதாதம்பட்டி கிராமத்தில் உள்ள நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகுபவர்கள், பள்ளி மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.
மனோகரன், பெரியதாதம்பட்டி.