தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து ெநரிசல்
விருதுநகர் நகர் பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் சென்று வர சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்.
சுப்பிரமணியன், விருதுநகர்.
பொதுமக்கள் அச்சம்
ராஜபாளையம் தாலுகா ராம்நகர் 4-வது தெருவில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் குழந்தைகள் சாலையில் செல்ல அச்சமடைகின்றனர். இதனால் பொதுமக்களும் சாலையில் அச்சத்துடன் தான் நடந்து செல்கின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், ராம்நகர்.
வாருகால் வசதி வேண்டும்
அருப்புக்கோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் வாருகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே கழிவுநீர் செல்ல வாருகால் அமைத்து தர வேண்டும்.
விக்னேஷ், அருப்புக்கோட்டை.
நோய் பரவும் அபாயம்
ஆலங்குளம் பகுதியில் சிலர் சாலையோரம் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆலங்குளம்.
நாய்கள் தொல்லை
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது குறுக்கிடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே நெடுஞ்சாலையில் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பொன்னுச்சாமி, ராஜபாளையம்.