தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகே அம்பேத்கர் சிலை முன்பு உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வரும் நிலையில் சேதமடைந்த சாலையால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ஜான்சன், சிம்மக்கல்.
தொற்றுநோய் அபாயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனையூர் பஞ்சாயத்து கட்டளைபட்டி கிராமம் அருந்ததியர் காலனியில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் வசதி கிைடயாது. இதனால் அங்குள்ள கோவில் முன்பாக கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மக்களின் நலன்கருதி இங்கு கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கட்டளைபட்டி.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ஆட்டோ, டாக்சி போன்ற வாடகை வாகனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இந்த வாடகை வாகனங்களை இயக்குபவர்கள் இங்குள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தி வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
மாரிமுத்து, ராமேசுவரம்.
கருவேலமரங்களை அகற்றுவார்களா?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா வேதியரேந்தல் தடுப்பணையில் இருந்து மேலநெட்டூர் கண்மாய் விவசாயிகளின் பாசன வசதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த கண்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியாத அளவில் நீர்பாதைகளில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே நீர்வழிப்பாதையில் உள்ள கருவேலமரங்களை அகற்ற வேண்டும்.
சூர்யா, மானாமதுரை.
சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை அடிவாரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சுவர் வசதி இல்லை. இதனால் இந்த மருத்துவமனைக்குள் பாம்பு போன்ற விஷபூச்சிகள் அடிக்கடி புகுந்து விடுகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். நோயாளிகளின் நலன்கருதி இங்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்.
ஸ்ரீகாந்த், சிங்கம்புணரி.
ஆக்கிரமிப்பு
மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் அருகே அண்ணா மெயின் ரோடு மேட்டுத்தெருக்களில் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் திணறுகிறார்கள். காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ேவலைக்கு செல்வோர் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கருப்பையா, மதுரை.
குப்பை தொட்டி தேவை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 35-வது வார்டு பகுதியில் எண்ணற்ற குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குப்பை தொட்டி இல்லை. இதனால் மக்கள் குப்பைகளை ஆங்காங்கே கொட்டுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோயை பரப்பி வருகிறது. பொதுமக்கள் நலன்கருதி இங்கு குப்பை தொட்டி அமைக்கப்படுமா?
அய்யனார், சிவகாசி.
பழுதடைந்த அடிபம்பு
மதுரை மாவட்டம் உத்தங்குடி அய்யனார் கோவில் அருகே மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் அடிபம்பு அமைக்கப்பட்டது. இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த அடிபம்பு பழுதடைந்தது. இதுவரை சரிசெய்யப்படாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
தர்பார் ராஜா, உத்தங்குடி.
சேதமடைந்த நிழற்குடை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல்சாக்குளம் முக்குரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். சேதமடைந்த நிழற்குடையால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையை சரிசெய்ய வேண்டும்.
சீனிவாசன், முதுகுளத்தூர்.
பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி பெருங்குடி அருகே பரம்புபட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் சேகரிக்கும் குப்பைகளை அங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டுகிறார்கள். இந்த குப்பை கிடங்கில் அவ்வப்போது சிலரால் தீ வைக்கப்படுகிறது. இதனால் எரியும் பிளாஸ்டிக், ரப்பர் போன்ற பொருட்களால் இப்பகுதியில் நச்சுகாற்று பரவி வருகிறது. இந்த காற்றை சுவாசிக்கும் மக்கள் மூச்சுத்திணறல், குமட்டல் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகள் இப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை உரிய முறையில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெருங்குடி.