தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதாள சாக்கடை கால்வாய் பராமரிக்கப்படாததால் பல இடங்களில் அதன் மூடிகள் திறந்த நிலையில் உள்ளன. இதனால் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை கால்வாயை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பிரதான சாலையில் ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுகிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. எனவே இப்பகுதியில் சாலையை விரிவுப்படுத்தி சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணிக்கம், தேவகோட்டை.

பஸ் நிலையத்தில் தரையில் அமரும் பயணிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளுக்கு போதிய அளவு இருக்கை வசதி இல்லை. இதனால் முதியோர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தரையில் அமர்ந்தும், நின்று கொண்டும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராம்குமார், கீழக்கரை.

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து கண்டதேவி செல்லும் சாலை பயன்படுத்த முடியாக வகையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மகேஷ், கண்டதேவி.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் டி.டி.கே. ரோடு, புல்லலக்கோட்டை ரோடு, அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் வழியில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் நிலை தடுமாறி அவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சில நேரங்களில் அவர்களை நாய்கள் கடித்து விடுகின்றன. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வினோத், விருதுநகர்.

நூலகம் அமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் நூலகம் இல்லை. இந்த கிராமத்தில் வசிக்கும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று படிக்கும் நிலை உள்ளது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு இவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த கிராமத்தில் நூலகம் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், தென்கரை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் அனுப்பானடி எச்.பி. காலனி 87-வது வார்டு பகுதியில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் நடப்பதற்கும், வாகனஓட்டிகள் பயணிப்பதற்கும் சரியான பாதையின்றி சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் இவ்வழியாக செல்வோர் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அனுப்பானடி.

சேதமடைந்த கட்டிடம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விளாச்சேரியில் பழமையான நூலகம் உள்ளது. தற்போது இந்த நூலகம் முறையாக பராமரிக்கப்படாமல் கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் இங்கு வருவோர் ஒருவித அச்ச உணர்வுடனே வந்து செல்கின்றனர். மேலும் நூலகத்தில் புத்தகங்களின் இருப்பும் குறைவாக உள்ளன. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பிய புத்தகம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே நூலகத்தின் கட்டிடத்தை சீரமைக்கவும், புத்தகங்களின் இருப்பை அதிகரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிச்சை, விளாச்சேரி.

விபத்து அபாயம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மறவர்பெருங்குடி கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்ராஜ், திருச்சுழி.

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

மதுைர மாவட்டம் மதிச்சியம் வைகை ஆற்றில் கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதுடன் இப்பகுதி மக்களின் விவசாயம் போன்ற தொழில் வளங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த ஆற்றின் நீரே இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. எனவே மழை காலம் தொடங்கும் முன் ஆற்றில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், மதுரை.


Next Story