தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

ஒளிராத மின்விளக்கு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பொட்டிதட்டி கிராமத்தில் அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள உயர்கோபுர மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பலர் இந்த வழியாக பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே எரியாத உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கதிர், பரமக்குடி.

தேங்கி கிடக்கும் குப்பை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதிகளில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த பகுதியில் துணை தாசில்தார் அலுவலகம், துணை ஆட்சியர் அலுவலகம் பின்புறம் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு உண்டாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், தேவகோட்டை.

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சாட்சியாபுரம், பனையடிப்பட்டி பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இவ்வழியாக பயணிப்பதை தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்கின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டயானா சேவியர், திருத்தங்கல்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் 52-வது வார்டு கரிமேடு களந்தோப்பு 2-வது தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் கசிந்து சாலையில் வெளியேறி வருகின்றது. சாைலயில் நடக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுவதோடு, தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே பாதாள சாக்கடை பள்ளத்தை சரிசெய்து கழிவுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெய், கரிமேடு.

பஸ் நின்று செல்லுமா?

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பஸ் நிறுத்தத்திற்கு தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் குறிப்பிட்ட சில பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் இங்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து, வழுதூர்.

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாவட்டம் ரிங்ரோட்டிலிருந்து மேலூர் ரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் சாலையில் பயணிப்பது என்பது மிகுந்த சவாலாகவே உள்ளது. அவசர தேவைக்கு சாலையில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள ெநரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜா, மதுரை.

குடிநீர் தட்டுப்பாடு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாரத்திற்கு குறிப்பிட்ட தினங்கள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகின்றது. வழங்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி மக்கள் அவதியடைகின்றனர். எனவே இந்த பகுதியில் வாரத்தின் அனைத்து நாட்களும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், திருப்பத்தூர்.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாவட்டம் சாமநத்தம் கிராமம் சேர்மத்தாய் வாசன் கல்லூரி வழியாக அவனியாபுரம் செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண்தங்கராஜ், சாமநத்தம்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. இயக்கப்படும் பஸ்களிலும் கூட்டம் அதிகரிப்பதால் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர்கள், கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அரசன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஆபத்தான மின்கம்பம்

மதுரை மாவட்டம் இ.மலம்பட்டி ஊராட்சி உடன்பட்டி கிராமம் செல்லும் வழியில் சிறுவனவயல் பகுதியில் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் விவசாயிகள் ஒருவித அச்ச உணர்வுடனே பணி செய்து வருகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துமாணிக்கம், இ.மலம்பட்டி.


Next Story