தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பன்றிகள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூர் ஊராட்சி ருத்திரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் பன்றிகள் அதிகமாக சுற்றி திரிகிறது. இந்த பன்றிகள் விளைநிலங்களை பாழ்படுத்துகிறது. எனவே பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோவிந்தநல்லூர்.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ்.ராமச்சந்திரபுரத்தில் உள்ள சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எஸ்.ராமச்சந்திரபுரம்.
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் வடக்கில் செங்குளம் கண்மாய் உள்ளது. மழைக்காலத்தில் கடல் போல் காட்சி அளிக்கும் கண்மாய் தற்போது நிலப்பரப்பே தெரியாத அளவுக்கு கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கண்மாய் வறண்டு போகும் நிலை உள்ளது. எனவே கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், சுந்தரபாண்டியம்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பஞ்சாயத்து அமீர்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் பன்றிகள் மற்றும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தொல்லை தரும் நாய்கள் மற்றும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அமீர்பாளையம்.
வருவாய்த்துறை கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் பல பகுதியில் சேதமடைந்து மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே வரும் நிலை உள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்து காணப்படும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜன், ஆனையூர்.