தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

சேதமடைந்த சாலை

விருதுநகர் பட்டேல் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக சாலையில் கனரக வாகனங்கள் அதிகமாக பயணிப்பதால் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் அருகே மினி பஸ்கள் அதிகமாக நிறுத்தப்படுகிறது. இதனால் காந்திரோடு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே அந்த பகுதியில் மினி பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை விதிக்க வேண்டும்.

தருண்ஜோஷி, சிவகாசி.

வேகத்தடை வேண்டும்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கங்கா குளம் ரோட்டில் இருந்து திருத்தங்கல் செல்லும் சாலையில் எஸ்.என். புரம் உள்ளது. இங்கு 2 இடங்களில் வளைவுகள் உள்ளன. இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே எஸ்.என்.புரம் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

சம்யுக்த், எஸ்.என்.புரம்.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முனியன் நாகம்பட்டியில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் சிறிய மழை பெய்தால் கூட குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. மேலும் சுரங்கப்பாதையின் இருபுறமும் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சுரங்கப்பாதை சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரியாபட்டி.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் காமராஜர் பஸ் நிலையம் அருகே சாலையில் புளியமரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. அதை உடனே அகற்றா விட்டால் மழை காலத்தில் காற்றுக்கு சாய்ந்து சாலையில் செல்வோர்கள் மீது விழுந்து உயிர் சேதமும், போக்குவரத்துக்கு தடையும் ஏற்படும். இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத்ராஜா, விருதுநகர்.


Next Story