தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நூலகம் திறக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கீழபொட்டல்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே இவர்கள் அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று படிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொஜ்ராஜ், கீழபொட்டல்பட்டி.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சில அரசு பஸ்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் சேதமடைந்த பஸ்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஆபத்தான மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தென்வடல் புது தெருவில் உள்ள மின்கம்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்து விடுமோ என இந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறும் முன் ஆபத்தான பழைய மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணன், சாத்தூர்.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி விவேகானந்தா பள்ளி சாலை முழுவதும் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. சாலையில் ஆங்காங்கே குப்பைகள் வீசப்பட்டு சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் சாலையும் மண் சாலையாக உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே குப்பைகளை அகற்றி, சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைரமுத்து, ராஜபாளையம்.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமம் 2-வது வார்டு நடுத்தெருவில் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். ஆதலால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.