தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ்.ராமச்சந்திரபுரத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனலட்சுமி, எஸ்.ராமச்சந்திரபுரம்.
செய்தி எதிரொலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள சாமிபுரம் காலனி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. தற்போது அதன் பயனாக அந்த பகுதியில் புதிய மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது. எனவே இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
முருகன், சிவகாசி.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பஞ்சாயத்து 7-வது வார்டில் வாருகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. ஆதலால் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கிய மழைநீரால் இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதிக்கு வாருகால் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேசுவரன், திருவண்ணாமலை.
குடிநீர் தட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் மும்முனை மின்சார வினியோகத்திலும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதிக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சார இணைப்பு வழங்குவதுடன் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும். பொன்ராஜ், செட்டியார்பட்டி.
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் அருகே செங்குளம் கண்மாய் உள்ளது. மழைக்காலத்தில் கடல் போல் காட்சி அளிக்கும் இந்த கண்மாய் தற்போது நிலப்பரப்பே தெரியாத அளவு கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கருவேல மரங்களை உடனடியாக அகற்றா விட்டால் இப்பகுதி வறட்சியாக மாறும் அபாயம் உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், வத்திராயிருப்பு.