தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடவடிக்கை தேவை
விருதுநகர் சந்திமரத்தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட சில தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்த பணியானது குடிநீர் குழாயை அமைப்பை சரிசெய்யாமலும், வாருகாலை சீரமைக்காமலும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே வாருகால், குடிநீர் குழாயை சரிசெய்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர், விருதுநகர்.
நிறைவடையாத பணி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் டி.கரிசல்குளம் கிராமத்தில் கழிவுநீர் வாருகால் அமைக்க பள்ளம் தொண்டப்பட்டது. நாட்கள் கடந்தும் தற்போது வரை பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நடக்க பாதையின்றி அவதியடைகின்றனர். எனவே பணியை விரைந்து முடித்து சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனபால், டி.கரிசல்குளம்.
ஆபத்தான பயணம்
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் பயணிக்கின்றனர். எனவே இந்த ஆபத்தான பயணத்தை தடுக்க அதிகாரிகள் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்குவதுடன் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
வேல்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
குவிந்து கிடக்கும் குப்பை
விருதுநகர் மாவட்டம் சாட்சியாபுரம் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் தேங்கிய குப்பைகளை சிலர் தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, இப்பகுதியினருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
மணிகண்டன், சாட்சியாபுரம்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகாசி.