தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சங்கரபாண்டியபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி கிடையாது. இதனால் இந்த பகுதியில் கழிவுநீரானது தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வராஜ், வெம்பக்கோட்டை.

தொற்றுநோய் பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மண்டபசாலை ஊராட்சிக்கு உட்பட்ட ம.ரெட்டியபட்டி சாலையில் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் சுகாதாரத்தை கெடுத்து வருகிறது. எனவே தொற்றுநோய் பரவும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருச்சுழி.

குண்டும், குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கட்டனூர் கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், கட்டனூர்.

மின்சாதன பொருட்கள் பழுது

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் மின்சார வினியோகம் சீரற்ற முறையில் குறைந்த அழுத்தத்தில் வினியோகிக்கப்படுகிறது. இதனால் வீட்டின் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய வேண்டும்.

எட்வின்ஜோஸ், சூலக்கரை.

தூர்வாரப்படாத கால்வாய்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிளியம்பட்டியில் உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் குப்பைகள் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழிவகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அர்ஜூன், கிளியம்பட்டி.

கூடுதல் பணியாளர்கள் தேவை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மின் அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

இப்ராகிம், சாத்தூர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா ஆனைக்குளம் ஊராட்சியில் தெருக்கள் மற்றும் சாலையில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்தப் பகுதியில் நடமாட முடியாமல் மக்கள், குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். மேலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று நாய்கள் கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றிதிரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மணி, ஆனைக்குளம்.

தேவையற்ற வேகத்தடை

விருதுநகரிலிருந்து கல்குறிச்சி செல்லும் சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த எண்ணற்ற வேகத்தடைகள் உள்ளன. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் தேவையான இடங்களில் மட்டும் வேகத்தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி, கல்குறிச்சி.

சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா சிப்பிப்பாறை வடக்கு தெரு காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. இது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் பொதுமக்கள் இதனருகே செல்ல அச்சப்படுகின்றனர். சேதமடைந்த இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அய்யாத்துரை, சிப்பிப்பாறை.

பஸ்வசதி

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆலங்குளம்.


Next Story