தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

நடவடிக்கை தேவை

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை புதிய காலனியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. அதன் அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியும் சேதமடைந்துள்ளதால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே அங்கன்வாடி மைய கட்டிடம், மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நந்து, குல்லூர்சந்தை.

மாணவர்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சி கீழச்செல்லையாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. ஆதலால் பள்ளி மாணவ- மாணவிகள் சாலையை கடக்க அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஏழாயிரம்பண்ணை.

மாசடையும் தண்ணீர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பெரிய கண்மாயிலிருந்து நகருக்குள் தண்ணீர் செல்லும் ஓடையில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் ஓடை குப்பைகள் சூழ்ந்து சுகாதார சீர்கேடுடன் காணப்படுவதுடன், தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையில் சேர்ந்த குப்பைகளை அகற்றி இப்பகுதியில் புதிய குப்பை தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

குண்டும், குழியுமான சாலை

விருதுநகர் ெரயில்வே பீடர் ரோடு தந்திமரதெரு அருகில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழை காலத்தில் இந்த சாலையில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயசந்திரன், விருதுநகர்.

சுற்றுச்சுவர் தேவை

தாயில்பட்டி துணை சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்தவெளியாக காணப்படுகிறது. எனவே பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தாயில்பட்டி.

ஆபத்தான மின்கம்பம்

விருதுநகரில் மாவட்ட மைய நூலகம் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் இந்த ஆபத்தான மின்கம்பத்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

குவிந்து கிடக்கும் கற்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பங்களா தெரு வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு பின்புறம் உள்ள அடிபம்பு அருகில் கற்கள் கோபுரமாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கற்கள் குவியலில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள கற்கள் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்தி ஆனந்த், சாத்தூர்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலைம் செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூா்.

சேதமடைந்த இருக்கை

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் கழிவறை மற்றும் பயணிகள் இருக்கை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குப்பைகள் சூழ்ந்து சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து, விருதுநகர்.

திறந்தநிலையில் பாதாள சாக்கடை

விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பெரியாண்டவர் கோவில் எதிரில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை திறந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாடும் அத்தியாவசிய சாலை என்பதால் வாகனஓட்டிகள், பாதசாரிகள் எதிர்பாராத விதமாக சாக்கடைக்குள் விழும் வாய்ப்பு உள்ளது. எனவே பாதாள சாக்கடையை மூட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

பஸ்வசதி

விருதுநகர் மாவட்டம் கைகாட்டிகோவில் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள் மடவார்வளாகம் சிவன் கோவிலுக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏற்கனவே மினிபஸ் தேவர் சிலையிலிருந்து பெருமாள்தேவன் பட்டி மற்றும் வன்னியம்பட்டிக்கு இயங்கிக்கொண்டு இருக்கிறது. அவற்றை கைகாட்டிகோவிலில் இருந்து இயக்கினால் அந்த பகுதி பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

முருகன், கைகாட்டிகோவில்.


Next Story