தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வினோத், திருச்சுழி.

சீரான போக்குவரத்து

விருதுநகர்- அல்லம்பட்டி மெயின்சாலையானது சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் தொழிற்சாலைகள் உள்ளன. வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மழை காரணமாகவும் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்திற்கு உதவ வேண்டும்.

உமாமகேசுவரி, அல்லம்பட்டி.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள தெருவிளக்கில் இருந்து வெளிவரும் வெளிச்சம் போதிய அளவு இல்லை. இதனால் இரவு நேரங்களில் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் இத்தெருவில் உள்ள சாலையில் புதர்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. எனவே அதிகாரிகள் தெருவிளக்கை சீரமைத்து, புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதவன், பாவாலி.

மாணவர்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் கஞ்சம்பட்டி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக பயணிக்கும் நோயாளிகள், பள்ளி மாணவர்கள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே புதிய சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கஞ்சம்பட்டி.

தேங்கி நிற்கும் மழைநீர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒரு பாலிடெக்னிக் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த வழியே தினமும் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் இந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாராயணன், ராஜபாளையம்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா சின்னக்கொல்லப்பட்டி ஊராட்சிமன்றம் அருந்ததியர் தெரு புதுக்காலனியில் உள்ள சாலை மண்சாலையாக காணப்படுவதுடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதார சீர்கேடுடன் காணப்படுவதால் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே வாருகாலுடன் கூடிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சாத்தூர்.

வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நூர்சாகிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக போக்குவரத்து தடைபட்டு மாற்றுப்பாதையில் பலகிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யம்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர்.

வாருகால் வசதி தேவை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கோசுகுண்டு அஞ்சல்முத்தார்பட்டி கிழக்கு தெருவில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வீட்டின் உள்ளே வந்து விடுகிறது. சாலையும் மண் சாலையாக காணப்படுவதால் மழைகாலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளித்து நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கழிவுநீர் செல்ல முறையான வாருகால்வசதி இல்லை. மேற்கண்ட பிரச்சினைகளால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைகின்றர். எனவே இப்பகுதியில் வாருகாலுடன் கூடிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன், கோசுகுண்டு.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி கிராமத்திலிருந்து விருதுநகர் பஸ் நிலையம் செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. அதிலும் குறிப்பாக காலை 8 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. அதன் பின்னர் 5 மணி நேரம் கழித்தே அடுத்த பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள், நோயாளிகள், வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பரத்ராஜா, இனாம்ரெட்டியபட்டி.

விபத்து அபாயம்

விருதுநகர் மாவட்டம் தபால் அலுவலக தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது மோதுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், விருதுநகர்.


Next Story