தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அச்சுறுத்தும் நாய்கள்
விருதுநகர் மாவட்டம் தெற்கு ரதவீதி சங்கிலி கருப்பசாமி கோவில் சாலையில் நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் சிறு குழந்தைகள், பள்ளி மாணவிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ஜெயச்சந்திரன், விருதுநகர்.
கால்வாய் தூர்வாரப்படுமா?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ஆகாசம்பட்டியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு நீரனாது தேங்கி உள்ளது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும்.
சிவகணபதி, வத்திராயிருப்பு.
பஸ்வசதி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து சிவகாசிக்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இ்ப்பகுதியில் உள்ள மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வெம்பக்கோட்டை.
தேங்கி நிற்கும் மழைநீர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஊருணிப்பட்டியில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பெய்த மழைநீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் மின்மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும்.
வினோத், ராஜபாளையம்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப்பகுதியில் கழிவுநீர் வடிய கான்கிரீட் தளம் அமைந்து மூடி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மூடியானது சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் இதில் விழும் நிலை உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மூடியை சீரமைக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி, சாத்தூர்.
குப்பைத்தொட்டி வேண்டும்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் முருகன் தியேட்டர் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் சாலையில் குப்பைகள் பறந்து வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் இதனை கடக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் குப்பை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்ராஜன், திருத்தங்கல்.
பூட்டி கிடக்கும் கழிவறை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெள்ளைக்கரை ரோட்டில் இருந்த பொதுகழிவறையை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் இதனை பராமரிப்பிற்காக பூட்டினர். பராமரிப்பு பணி முடிந்து நீண்ட நாட்கள் ஆன பின்பும் இந்த கழிவறையானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சாத்தூர்.
போக்குவரத்து நெரிசல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சிலர் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சாலையில் நிறத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூபன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பன்றிகள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இவை விளைபயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் நஷ்டப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஸ்கரன், அருப்புக்கோட்டை.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியினர் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை தொடர்கிறது. எனவே இப்பகுதியில் தாமிரபரணி குடிநீரை தடையின்றி வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.