தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகள் அகற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வடக்குத்தெரு பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு உருவாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டீபன்ஜேசுதாஸ், ராஜபாளையம்.
செய்தி எதிரொலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட சித்துராஜபுரம் பஞ்சாயத்து பகுதியில் இருக்கும் மயானம் புதர் மண்டி கிடந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அந்த மயானத்தை பாஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் உடனே சீரமைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், சித்துராஜபுரம்.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் இந்த சாலைகள் சேறும், சகதியாக மாறி காட்சியளிக்கின்றது. மேலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
கார்த்திக், பணிக்கனேந்தல்.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பூலாங்கால் வடக்குபட்டி கிராமத்தில் உள்ள நீர்தேக்க தொட்டியானது சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தூண்களில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் விபத்து எதுவும் நிகழ்வதற்குள் நீர்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடராஜன், திருச்சுழி.
அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் பாளையம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அனுப்ப மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன், பாளையம்பட்டி.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து லட்சுமிபுரம் வழியாக கீழாண்மறைநாடு செல்லும் சாலை சில இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிமாறன், ஆலங்குளம்.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ள வில்வராயன் கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. இதனால் கண்மாயில் நீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் விவசாயப்பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், வத்திராயிருப்பு.
விபத்து ஏற்படும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் சில இடங்களில் உள்ள சாலையோர தடுப்பு கம்பி சேதமடைந்துள்ளது. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாய சூழ்நிலை நிலவுகிறது. எனவே அசம்பாவிதம் எதுவும் நிகழ்வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, சிவகாசி.
சாலை சீரமைக்கப்படுமா?
விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தார் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விபத்துகள் நடப்பதற்குள் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருணன், விருதுநகர்.
தடுப்புச்சுவர் வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் கணஞ்சாம்பட்டி ஊராட்சி சத்திரப்பட்டியில் இருந்து தாயில்பட்டி செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே இந்த தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கணஞ்சாம்பட்டி.