தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாதை வேண்டும்
விருதுநகர் தாலுகா ஆதிபட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாமல் ஓடை வழியாக எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரத்ராஜா, விருதுநகர்.
போக்குவரத்து நெரிசல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மெயின் ரோட்டில் முக்குராந்தல் பகுதி முதல் கிருஷ்ணன்கோவில் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சாத்தூர்.
பொதுமக்கள் அவதி
விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் ஆர்.ஆர்.நகர் கிழக்குப்பகுதியில் சேவை ரோடு இல்லாததால் அந்த பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பலமுறை கோரிக்கையாக முன்வைத்தும் பணிகள் எதுவும் நடைபெறாததால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே விரைவாக அந்த பகுதியில் சேவைரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
சேதமடைந்த சுற்றுச்சுவர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சக்கரைகுளம் தெப்பத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து உள்ளது. இதில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரங்கநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர்.