தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்கம்பங்கள் அகற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஹவுசிங்போர்டு பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பல மின் கம்பங்கள் சரிந்து விழுந்த நிலையில் அவை அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே சரிந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூமிநாதன், சிவகாசி.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்டம் சல்வார்பட்டி பஞ்சாயத்தில் இறவார்பட்டி கிராமத்தில் மழைநீர் செல்ல அமைக்கப்பட்ட வடிகால் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைக்காலங்களில் தண்ணீர் வடிகாலில் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இறவார்பட்டி.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் ஊராட்சி முத்துக்குமராபுரம் கிராமத்தில் உள்ள அடிபம்பு பராமரிப்பு இன்றி பழுதடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் போதிய அளவு குடிநீர் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த அடிபம்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன், முத்துக்குமராபுரம்.
ஆபத்தான வேகத்தடை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையின் உயரம் குறைவாக உள்ளதால் கனரக வாகனங்கள் வேகத்தடையை கண்டுகொள்ளாமல் அதிவேகமாக கடந்து செல்கின்றன. எனவே முறையான அறிவிப்பு பலகை வைத்து வேகத்தடையின் உயரத்தை சரியான அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காரியாபட்டி.
பராமரிப்பற்ற சாலை
விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தின் உட்பகுதியில் உள்ள தார் சாலையானது மிகவும் மோசமாக எந்தவித பராமரிப்பின்றி உள்ளது. இதனால் இந்த சாலையை மக்கள் மிகவும் சிரமத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த சாலையை முறையாக பராமரித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வெள்ளூர்.