தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடைபாதை வேண்டும்
விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தின் எதிரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை தினமும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ராணுவம், காவல்துறை பணிகளுக்கு தயார்படுத்திக்கொள்ளும் வாலிபர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். சில சமயங்களில் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நுழைவுவாயில் பகுதியின் இருபுறமும் புதர்மண்டி மேடு, பள்ளமாக காணப்படுகிறது. எனவே புற்களை அகற்றி நடைபாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி, விருதுநகர்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், திருச்சுழி.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பி.ராமச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பட்டி காலனியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி அருகே பழமை வாய்ந்த கிணறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும் இதன் ஆபத்தை அறியாத சிறுவர்கள் இதன் அருகில் விளையாடுகின்றனர். எனவே கிணற்றை தூர்வாரி, சுற்றி இரும்பு வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னுச்சாமி, பி.ராமச்சந்திரபுரம்.
பொதுமக்கள் சிரமம்
விருதுநகர் மாவட்டம் விளையாட்டு மைதானத்தின் வடக்கு பகுதியில் நகருக்கு நுழையும் பிரிவில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சாலை ஒருவழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னரும் வேகத்தடை அகற்றப்படாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வேகத்தடையை அகற்றி விளையாட்டு மைதானத்தின் சர்வீஸ் ரோட்டு பகுதியில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் மேலதெரு வீதியில் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. தேங்கிய தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயச்சந்திரன், விருதுநகர்.