தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்வயர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அருகில் மின்வயர் தலையில் தட்டும் வகையில் தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த அலுவலகத்திற்கு வருவோர்க்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுரிநாதன், வாடிப்பட்டி.
விபத்து அபாயம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆங்காங்கே சாலை பெயர்ந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரத்தில் செல்லும்போது பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை சீரமைக்கப்படுமா?
பொதுமக்கள், வாடிப்பட்டி.
சாலை வசதி வேண்டும்
மதுரை மாநகராட்சி யாகப்பா நகர் 39 -வார்டில் உள்ள அனைத்து தெருக்களும் மிகவும் மோசமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் சாலை முழுவதும் மோசமாகி விட்டது. எனவே இந்த பகுதியில் சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனம், யாகப்பா நகர், மதுரை.
தெருவிளக்குகள் வேண்டும்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா கொண்டுரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள தெருக்களில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண், கொண்டுரெட்டிபட்டி, மதுரை.
பொதுமக்கள் அச்சம்
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு தாகூர் நகர் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், தாகூர் நகர், மதுரை.