தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் கோசுகுண்டு ஊராட்சியை சேர்ந்த முத்தார்பட்டி மேற்கு தெருவில் கழிவுநீர் செல்ல முறையான வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீர் பொதுமக்கள் நடக்கும் பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டியராஜ், கோசுகுண்டு.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மணி நகரம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பெரியவர்கள் வெளியே செல்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே நாய்கள் தொல்லையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயச்சந்திரன், விருதுநகர்.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் திகழ்கிறது. இந்தநிலையில் இருக்கன்குடி போன்ற கோவில் நகரங்களில் இருந்து இங்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவே உள்ளது. பயணிகள் காத்திருந்து பயணிப்பதால் கால விரயம் ஏற்படுவதுடன் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பகுதியில் கொசுக்களின் தொல்லை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. இதனால் சரியான தூக்கமின்றி கர்ப்பிணிகள், முதியோர்கள், மாணவர்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துபாண்டி, தாயில்பட்டி.
புதிய பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
விருதுநகர் புதிய பஸ்நிலையம் பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. பழைய பஸ்நிலையம் குறுகலான இடத்தில் செயல்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே புதிய பஸ்நிலையத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜபாண்டி, விருதுநகர்.