தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் வேண்டும்
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கே உள்ள ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் கடை வாடகை இடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே இங்கு ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
சுகாதார சீர்கேடு
மதுரை வைகை ஆற்றின் இருகரைகளிலும் அமைக்கப்பட்ட விரிவாக்க சாலையில் பேச்சியம்மன் படித்துறை, இஸ்மாயில் புரம் ஆகிய பகுதிகளில் கால்நடைகளின் சாணங்கள் அதிகளவில் காணப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட நடைமேடையில் சிலர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே வைகை கரை இருபுறமும் கழிப்பறை அமைத்து சுகாதாரம் காக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி, மதிச்சியம்.
மேம்பால பணிகள் முடிக்கப்படுமா?
மதுரை மாநகர் முடக்குசாலை பகுதியில் மேம்பால வேலைகள் மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. இதற்கு மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்ட வழித்தடங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
சிவா, விராட்டிபத்து.
ஆபத்தான பயணம்
அழகர்கோவிலிலிருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு காலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பீர்மைதீன், அழகர்கோவில்.
தொற்று நோய் பரவும் அபாயம்
மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை எதிரே புதிதாக கட்டியுள்ள நடைபாதையில் சிலர் சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தி வருகிறார்கள். இதனால் அதன் வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்குமார், சோழவந்தான்.