தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, ஆலங்குளம்.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகருக்குள் அதிக அளவில் பன்றிகளும், மாடுகளும் திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் மாடுகள் சாலையில் செல்வோரை முட்டுகின்றன. மேலும் திடீரென சாலையின் குறுக்கே செல்வதால் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகள் சாலையில் சுற்றுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாத்தூர்.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காரியாபட்டி.
ெபாதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வழியாக செல்லும் தங்க நாற்கரச்சாலையிலும், அதன் இரு புறங்களிலும் செல்லும் அணுகு சாலையிலும் அளவிற்கு அதிகமாக மணல் குவிந்துள்ளதால் அதன் வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் மணலில் சிக்கி சறுக்கி விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும்.
ஸ்ரீராம், சாத்தூர்.
நடவடிக்கை வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் இடையன்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட அருந்ததியர் தெருவில் குடிநீர் குழாய் அருகே குப்பை தொட்டி உள்ளது. குப்பைகள், கழிவுநீர் சூழ்ந்து மக்கள் குடிதண்ணீர் பிடிக்கும் இடத்தில் மிகவும் மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னுச்சாமி, இடையன்குளம்.