'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அரசு பள்ளி பழைய கட்டிடம் இடிப்பு
‘தினத்தந்தி' செய்தி எதிரொலியால் அரசு பள்ளி பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பிள்ளப்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 1968-ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுதித்தன்மை இழந்து அபாயகரமான நிலையில் இருந்தது. இதனால் பழைய கட்டிடத்திற்கு அருகிலேயே பள்ளி வளாகத்திற்குள் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பழைய கட்டிடம் அப்புறப்படுத்தப்படாமல் எந்த நேரமும் கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஜூலை 26-ந்தேதி தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறையினர் நேற்று அந்த பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.