'தினத்தந்தி' செய்தி எதிரொலி:சாக்கடை கால்வாய் அடைப்பு சரி செய்யப்பட்டது


தினத்தந்தி செய்தி எதிரொலி:சாக்கடை கால்வாய் அடைப்பு சரி செய்யப்பட்டது
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் சாக்கடை கால்வாய் அடைப்பு சரி செய்யப்பட்டது.

ஈரோடு

கோபி நகராட்சிக்குட்பட்ட பாரியூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை உள்ளது. ஆலையின் முன் பகுதியில் கழிவுநீர் செல்வதற்காக சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியே செல்லாமல் அப்படியே தேங்கி நின்றது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் படத்துடன் பிரசுரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய கோபி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி கோபி நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் நேற்று அங்கு சென்று சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்தனர். அதனைத்தொடர்ந்து தேங்கி நின்ற கழிவுநீர் தங்கு தடையின்றி சென்றது. பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.


Next Story