திண்டுக்கல்லை வறட்சி மாவட்டமாகஅறிவிக்க வேண்டும்


திண்டுக்கல்லை வறட்சி மாவட்டமாகஅறிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Sept 2023 1:00 AM IST (Updated: 23 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டுக்கல்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

கருப்பையா:- ரெட்டியார்சத்திரம் அருகே தாதன்கோட்டையில் கல்குவாரியால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. பாறையை உடைக்கும் போது சிதறி விழும் கற்களால் மனிதர்கள், கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கலெக்டர்:- இதுதொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் விசாரணை நடத்தப்படும்.

இறப்பு சான்றிதழ்

செல்லமுத்து:- ஒட்டன்சத்திரம் வெரியப்பூரில் குளத்தின் கால்வாய் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வருவது தடைபடுவதை தடுக்க வேண்டும்.

கலெக்டர்:- கால்வாயை ஆய்வு செய்து புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கவேல்:- ஆர்.கோம்பையில் புங்கம்பாடிகுளத்தின் மதகு சேதமாகிவிட்டது. இதனால் பலத்த மழை பெய்தும் குளத்தில் தண்ணீரை தேக்கமுடியவில்லை. இறப்பு சான்றிதழ் கிடைப்பது மிகவும் தாமதம் ஆகிறது.

கலெக்டர்:- குளத்தின் மதகுகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறப்பு சான்றிதழ் கேட்டு வந்துள்ள அனைத்து மனுக்களையும் வருவாய்த்துறையினர் துரிதமாக விசாரிக்க வேண்டும்.

வறட்சி மாவட்டம்

பாத்திமா ராஜரெத்தினம்:- மழை பெய்யாததால் ஒரு பருவம் முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இணை இயக்குனர்:- இதுதொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

ராமசாமி:- வேடசந்தூரில் வேளாண் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் 10 ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. ஆனால் அதிகாரிகள் பணியில் இருப்பதாக கூறுகின்றனர். பஞ்சமி நிலம் விற்பனை தொடர்பான பத்திரப்பதிவை ரத்து செய்யும்படி மனு கொடுத்தால், ஆக்கிரமிப்பு இல்லை என்று பதில் அனுப்புகின்றனர்.

முத்துச்சாமி:- சாணார்பட்டி பகுதி விவசாயிகள் காய்கறிகள், பூக்களை விற்க திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு வாகனங்களில் கொண்டு வருகின்றனர். அந்த வாகனங்களை திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் போலீசார் சோதனை எனும் பெயரில் நீண்டநேரம் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை.

கலெக்டர்:- விவசாயிகள் காலையில் உரிய நேரத்தில் விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் தான் உரிய விலை கிடைக்கும். எனவே விளைபொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் உடனே அனுப்ப வேண்டும்.

தக்காளிக்கு விலை கிடைக்குமா?

ராஜேந்திரன்:- ஒட்டன்சத்திரத்தில் 1,000 டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி கட்டப்படுகிறது. அங்கு 200 டன் வீதம் 5 பிரிவுகளாக விளைபொருட்களை வைக்க வசதி உள்ளது. சிறு விவசாயிகள் 25 டன் முதல் 50 டன் வரை பொருட்கள் வைக்க இடம் ஒதுக்க வேண்டும்.

கலெக்டர்:- ஒட்டன்சத்திரம் கிட்டங்கி கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராகி விட்டது. எனவே புதிதாக கிட்டங்கி வரும்போது வசதி செய்யப்படும். திண்டுக்கல், பழனியில் குறைந்த அளவு பொருட்களை வைக்கும் கிட்டங்கி உள்ளது. அதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

வேலுச்சாமி:- தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்றபோது அனைவரும் போராடினர். தற்போது விலை இல்லாமல் தக்காளியை கீழே கொட்டும் நிலை உள்ளது. தக்காளிக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொட்டி பாலம்

கூட்டத்தின் இறுதியில் விருவீடு, உசிலம்பட்டி விவசாயிகள் பேச வாய்ப்பு கேட்டனர். இதையடுத்து கலெக்டர், விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். அந்த விவசாயிகள் பேசுகையில், விருவீட்டில் தொட்டி பாலம் பகுதியில் உள்ள கல்குவாரி, கிரஷர், வெடிமருந்து குடோனை நிரந்தரமாக மூட வேண்டும், என்றனர்.

இதற்கு கலெக்டர் பதில் அளித்து பேசுகையில், அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வு அறிக்கை கிடைத்ததும் தொட்டி பாலத்தை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


Next Story