திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்கள்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் திரண்டு வந்தனர்.
கிராம மக்கள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து மாவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்தநிலையில் நத்தம் தாலுகா பண்ணுவார்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் வீடு இன்றி தவிக்கிறோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி போலீசார் தெரிவித்தனர். அதன்படி, பண்ணுவார்பட்டி கிராம மக்கள் சார்பில் சிலர் மட்டும் கூட்ட அரங்குக்கு சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த காரமடையை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தங்கள் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தை அகற்றிவிட்டு பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
240 மனுக்கள்
கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடியை சேர்ந்த விவசாயி கணேஷ்பாபு கொடுத்த மனுவில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தற்போது திங்கட்கிழமைகளில் நடக்கிறது. அதே நாளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டமும் நடப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு அதிகாரிகள் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வழக்கம் போல் ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 240 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதையடுத்து 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள் மற்றும் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் நிவாரண உதவி ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.