திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
கணவரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. இதையடுத்து மாவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இந்த நிலையில் கோரிக்கை மனு கொடுப்பதற்காக மகன், மகளுடன் ஒரு பெண் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அவருடைய கையில் ஒரு பை இருந்தது. கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவர்களின் உடைமைகளை போலீசார் சோதனையிடுவதை பார்த்த அந்த பெண், திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அருகில் நின்றுகொண்டிருந்த மகன் மீது ஊற்றினார். பின்னர் தனது உடலிலும் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் ஓடிச்சென்று அந்த பெண்ணை தடுத்து, தாய், மகன் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர்.
நடவடிக்கை எடுக்கவில்லை
பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பட்டிவீரன்பட்டியை அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்த மட்டை வியாபாரி நாகேந்திரன் மனைவி மகேஷ்வரி (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு 7 வயதில் ஒரு மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேஷ்வரியின் கணவரை சிலர் அடித்து கொன்றுவிட்டனர்.
அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த மகேஷ்வரி கலெக்டர் அலுவலகம் வந்து மகனுடன் தீக்குளிக்க முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை எச்சரித்த போலீசார், அவரை அழைத்துச்சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க வைத்தனர். பின்னர் விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
வயதான தம்பதி
இதையடுத்து வேடசந்தூர் தாலுகா வேல்வார்கோட்டையை அடுத்த புதுக்களராம்பட்டியை சேர்ந்த சங்கன் (70), அவருடைய மனைவி கன்னியம்மாள் (65) ஆகியோர் கண்ணீர் மல்க கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனக்கு சொந்தமான நிலத்தை எனது மகன் என்னை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டான். மேலும் என்னையும், எனது மனைவியையும் துன்புறுத்துகிறான். எனவே எனது மகனிடம் இருந்து எனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
நேற்று நடந்த கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட 197 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 4 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவியை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.