திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் ஈரோட்டில் கைது
திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டார். அவருடைய கள்ளக்காதலியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டார். அவருடைய கள்ளக்காதலியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பா.ஜ.க. நிர்வாகி கொலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அக்கமநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). பா.ஜ.க. ஒன்றிய வர்த்தக அணி துணைத்தலைவராக இருந்த இவர், சொகுசு கார்களை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். செந்தில்குமாருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி ஈரோட்டிற்கு வாடகைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதைத்தொடர்ந்து 2 நாட்கள் கழித்து தனலட்சுமி, கணவர் செந்தில்குமாரை காணவில்லை என்று ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கண்டித்தான்குளம் மூகாம்பிகை நகர் பகுதியில் உள்ள வாய்க்காலில் கல்லை கட்டி வீசி சென்றது தெரியவந்தது.
வேறு நபருடன் பழக்கம்
இதைத்தொடர்ந்து முன்னீர்பள்ளம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில், ஈரோடு வெட்டுக்காட்டு வலசை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பர்சத் பானு (28) என்பவருடன் செந்தில்குமாருக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, 2 பேரும் பழகி வந்துள்ளனர். பின்னர், பர்சத் பானுவின் தம்பியின் நண்பரான திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த பெயிண்டர் பாலகிருஷ்ணன் (30) என்பவருடன் பர்சத் பானுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த செந்தில்குமார், பர்சத் பானுவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் தனது கூட்டாளிகளான கலைவேந்தன், நித்திஷ்குமார், சங்கரபாண்டி, பூதலிங்கம், மலையாண்டி ஆகியோருடன் சேர்ந்து செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
வாலிபர் கைது
இதற்காக பாலகிருஷ்ணன் ஈரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி, செந்தில்குமாரை வாடகைக்கு கார் வேண்டும் என கூறி வரவழைத்துள்ளார். பின்னர் ஈரோடு வந்த செந்தில்குமாரை விடுதியில் வைத்து தாக்கி, அவரது காரிலேயே ஏற்றி அடித்து கொலை செய்து, உடலை நெல்லை மாவட்டத்தில் உள்ள கால்வாயில் கல்லை கட்டி வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னீர்பள்ளம் போலீசார் கலைவேந்தன், நித்திஷ்குமார், சங்கரபாண்டி, பூதலிங்கம், மலையாண்டி ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் செந்தில்குமார் கொலை வழக்கு, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள பர்சத் பானுவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.