திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதை திட்டம் நிறைவேறுமா?


திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதை திட்டம் நிறைவேறுமா?
x
தினத்தந்தி 6 Jan 2023 12:45 AM IST (Updated: 6 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல், தேனி மாவட்ட மக்களிடம் கேட்ட போது அவர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:

திண்டுக்கல்


இறைவழிபாட்டுக்கு உகந்த தமிழ் மாதங்களில் கார்த்திகை முக்கியமானது. கார்த்திகை மாதம் என்றதும் சாமியே சரணம் அய்யப்பா எனும் சரண கோஷம் நினைவு வரும். அந்த அளவுக்கு கார்த்திகை மாதமே அய்யப்ப சீசன் என்றாகிவிட்டது.


சபரிமலைக்கு ரெயில் பாதை


கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கின்றனர். குருசாமியின் வழிகாட்டுதலோடு அய்யப்ப பக்தர்கள் குழு, குழுவாக செல்கின்றனர். இதற்காக கார், வேன், பஸ்கள் மட்டுமின்றி ரெயில்களிலும் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.


தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ரெயில்களில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். இதற்கு வசதியாக நாகர்கோவில் வழியாகவும், தென்காசி-புனலூர் வழியாகவும், கோவை-திருச்சூர் வழியாகவும் சபரிமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.


இதன் வழியாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்கின்றனர். ஆனால் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்கு ரெயில் வசதி இல்லை. இதற்கு திண்டுக்கல், தேனி, மதுரையில் இருந்து சபரிமலைக்கு ரெயில் பாதை வசதி இல்லை.


ஆன்மிக சுற்றுலா மையம்


இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குமுளி வழியாக சாலை மார்க்கமாகவே சென்று வருகின்றனர். இந்த வழியாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல், தேனி வழியாக சபரிமலைக்கு ரெயில் வசதி இருந்தால் பக்தர்கள் அதை பயன்படுத்தி எளிதாக சென்று வருவார்கள். இதற்காக திண்டுக்கல்லில் இருந்து தேனி, குமுளி வழியாக சபரிமலைக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதை அமைந்தால் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருக்கும் முக்கிய கோவில்களுக்கு வழிபட வருவார்கள். இதன்மூலம் திண்டுக்கல், தேனி மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலா மையமாக மாறிவிடும்.


வர்த்தகம் அதிகரிக்கும்


இதேபோல் கேரளாவில் விளையும் ஏலக்காய், மிளகு, தேயிலை எளிதாக தமிழகத்துக்கு கொண்டு வரமுடியும். மேலும் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விளையும் காய்கறிகள், பூக்கள் தற்போது லாரிகள் மூலம் செல்கின்றன. தேனி மாவட்டத்தில் விளையும் பன்னீர் திராட்சை, வாழைக்காய் போன்றவை பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக இருக்கும்.


தற்போது மதுரையில் இருந்து போடி வரை ரெயில் வசதி இருக்கிறது. திண்டுக்கல்-தேனி-சபரிமலை ரெயில் பாதை அமைந்தால் மதுரையில் இருந்தும் சபரிமலைக்கு ரெயில் வசதி கிடைக்கும். இதனால் மதுரை சுற்றுவட்டார மக்களும், அய்யப்ப பக்தர்களும் பயன்பெறுவார்கள். இதனால் ஆன்மிக சுற்றுலா மட்டுமின்றி தமிழகம், கேரளாவில் வர்த்தகமும் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திண்டுக்கல்-சபரிமலை ரெயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பலஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


ஆய்வோடு நின்ற திட்டம்


அதன்படி 1934-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் திண்டுக்கல்-லோயர்கேம்ப் ரெயில் பாதை திட்டம் கொண்டு வரப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆய்வோடு திட்டம் நின்று போனது. இது, 1996-ம் ஆண்டு திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதை திட்டமாக மாறியது. திண்டுக்கல்-சபரிமலை இடையே 201 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைப்பதற்கு ஆய்வு பணிகள் நடந்தது. இதில் முதற்கட்டமாக திண்டுக்கல்-போடி இடையே 134 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. எனினும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.


நிறைவேறுமா?


இந்த நிலையில் தேனி, குமுளி வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரெயில் பாதை அமைந்தால் நிம்மதியாக பயணம் செய்வார்கள். அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வணிகர்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களும் ரெயிலில் வசதியாக சென்று வருவார்கள்.


இதனால் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு, தேனி, போடி, கம்பம், குமுளி வழியாக சபரிமலைக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே திட்டம் சாத்தியமாகும். இதற்காக தேனி மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தியும் பலன் இல்லை. இதுகுறித்து திண்டுக்கல், தேனி மாவட்ட மக்களிடம் கேட்ட போது அவர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-


நறுமண பொருட்கள்


வக்கீல் அழகர்ராஜா (உத்தமபாளையம்) :- தமழகம்-கேரளாவை இணைக்கும் கம்பம்மெட்டு, குமுளி வழியாக தினந்தோறும் கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்துக்கு லாரிகள் மூலம் ஏலக்காய், மிளகு உள்ளிட்ட நறுமண பொருட்கள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. தேனி, தேவாரம், போடி உள்ளிட்ட ஊர்களில் அவை தரம் பிரிக்கப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு அவை கொண்டு செல்லப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் அதிகமான நறுமண பொருட்கள் விளைகின்றன. இந்த பொருட்களை தரைவழி மார்க்கமாக கனரக வாகனங்கள் மூலம் கொண்டு வரும்போது போக்குவரத்துக்கு அதிக செலவு ஆகிறது. இந்த ரெயில் சேவை கிடைத்தால் நறுமண பொருட்கள் கொண்டு செல்வது மிக எளிதாகும்.


பெரியார் வைகை பாசன விவசாய சங்க தலைவர் பொன்காட்சி கண்ணன்:- திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதை திட்டத்துக்காக விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதில் முதல் கட்டமாக போடியில் இருந்து லோயர்கேம்ப் வரையில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களை ரெயில் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப முடியும். மேலும் தேக்கடி, ஹைவேவிஸ் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வர எளிதாக இருக்கும்.


எனவே மத்திய, மாநில அரசுகள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இத்திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இருமாநில வளர்ச்சி


அய்யப்ப பக்தர் வெள்ளைச்சாமி (பூதமரத்துப்பட்டி) :- திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். திண்டுக்கல்-சபரிமலை இடையே ரெயில் இயக்கினால் அய்யப்ப பக்தர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். திண்டுக்கல் மட்டுமின்றி பக்கத்து மாவட்ட பக்தர்களும் திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை செல்ல முன்வருவார்கள். சென்னை உள்பட வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் திண்டுக்கல்லுக்கு வந்து பின்னர் பஸ்களில் சபரிமலைக்கு செல்கின்றனர். இந்த ரெயில் பாதை அமைந்தால் பக்தர்கள் விரைவாக சபரிமலைக்கு சென்று அய்யப்பசாமியை தரிசனம் செய்யலாம்.


ஓட்டல் உரிமையாளர் துரைபாண்டி (குட்டியப்பட்டி பிரிவு) :- திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதை அமைந்தால் அய்யப்ப பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுதவிர வணிகர்கள், தொழிலாளர்கள் கேரளாவுக்கு அதிகம் செல்கின்றனர். அதேபோல் கேரளாவில் இருந்தும் பலர் வருகின்றனர். திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதை அமைந்தால் இருமாநில வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். மேலும் திண்டுக்கல், தேனி மாவட்டங்களை இணைக்கும் ரெயில் போக்குவரத்து இல்லை. அந்த ரெயில் பாதை அமைந்தால் இருமாவட்டங்களிலும் வணிகம், சுற்றுலா வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


3 மணி நேர பயணம் மட்டுமே...


ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், திண்டுக்கல்-சபரிமலை இடையே 201 கி.மீ. தூரம் ரெயில் பாதை திட்டத்துக்கு இருமுறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.10 லட்சம் வரை செலவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு மலையை குடைந்து பாதை அமைக்க வேண்டியது ஏற்படும். நவீன தொழிற்நுட்ப வசதிகள் இருப்பதால் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் தான். இந்த திட்டம் நிறைவேறினால் திண்டுக்கல்லில் இருந்து 3 மணி நேரத்தில் சபரிமலைக்கு சென்று விடலாம்.


மதுரைக்கு புதிய வழித்தடம்


மதுரையில் இருந்து போடிக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே திண்டுக்கல்-சபரிமலை ரெயில் வசதி அமைந்தால், மதுரை-சபரிமலை வழித்தடம் புதிதாக கிடைக்கும். இதன்மூலம் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மக்கள், பக்தர்கள் மதுரையில் இருந்து சபரிமலைக்கு சென்று வருவதற்கு வசதி கிடைக்கும். எனவே திண்டுக்கல்-சபரிமலை திட்டத்தை மதுரை மாவட்ட மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


அனைவருக்கும் வரப்பிரசாதம்


சென்னை, விழுப்பும், கடலூர், புதுச்சேரி உள்பட வடக்கு பகுதியில் இருந்து வருபவர்கள் ரெயில், பஸ் மூலம் திண்டுக்கல்லுக்கு வருகின்றனர். பின்னர் திண்டுக்கல்லில் இருந்து தேனி, போடி, குமுளி வழியாக சபரிமலை செல்கின்றனர். திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதை அமைந்தால் அனைத்து பகுதி மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும்.


ஆன்மிக-சுற்றுலா தலங்கள்


பழனி, கொடைக்கானல், சுருளிஅருவி, தேக்கடி, கண்ணகிகோவில் என ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்கள் நிறைய உள்ளன. திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதையுடன் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் பாதையை இணைத்தால் சுற்றுலா மேம்படும். அதன்மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.



Next Story