டிப்ளமோ மாணவர் தற்கொலை


டிப்ளமோ மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 29 Sept 2022 1:54 AM IST (Updated: 29 Sept 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் தொலைத்ததை தந்தை கண்டித்ததால் டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

ஓமலூர்:-

செல்போன் தொலைத்ததை தந்தை கண்டித்ததால் டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டிப்ளமோ மாணவர்

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பச்சனம்பட்டி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி, கூலித்தொழிலாளி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 19). இவர் மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரியில் இருந்து மாணவர் மணிகண்டன் வீடு திரும்பினார். அவர் வீட்டிற்கு வந்ததும் தனது தாயாரிடம் தான் அணிந்திருந்த ஆடைகளை துவைப்பதற்கு கழற்றி கொடுத்து விட்டு வீட்டுக்குள் சென்றார். அதன்பிறகு அவர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டதாக தெரிகிறது.

தூக்கில் தொங்கினார்

வீட்டுக்குள் சென்ற மகன் வெளியில் வராததால் அவரது தாயார் கதவை தட்டி உள்ளார். கதவை மகன் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவர் பார்த்தார். அங்கு மின்விசிறி தொங்கவிடும் இரும்பு கொக்கியில் மணிகண்டன், சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அந்த மாணவரை மீட்ட அவர்கள் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவரின் பிணத்தை கைப்பற்றி அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் தொலைத்ததால் கண்டிப்பு

இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் வழக்குப்பதிவு செய்தார். மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். இதில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் ஆன்ட்ராய்டு செல்போனை தொலைத்து விட்டார். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் தொலைந்த தகவலை கூறி புதிய செல்போன் வாங்க வேண்டும் என்று பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை நானே கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்துகிறோம், தற்போது செல்போன் வாங்க பணம் எப்படி தரமுடியும் என்று கூறி மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மாணவர் மணிகண்டன் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செல்போன் ெதாலைத்ததை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பச்சனம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story