நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக தொடங்க கோரிக்கை


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக தொடங்க கோரிக்கை
x

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் விமலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாரதீய கிசான் சங்க மாநில செயலாளர் வீரசேகரன் பேசுகையில், வேளாண் துறையில் குறைந்தபட்ச மானிய திட்டங்களுக்கு கூட ஆதார் எண் கேட்கப்படுகிறது. இந்தநிலையை தவிர்க்க ரூ.2 ஆயிரத்துக்கு குறைவான மானிய திட்டங்களுக்கு ஆதார் தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை லால்குடி பகுதியில் உடனடியாக தொடங்க வேண்டும். கடந்த ஆண்டு செயல்பட்ட 21 மையங்களையும் இந்த பருவ காலத்திலும் செயல்படுத்த வேண்டும். வருகிற மாதத்தில் மாவட்டம் முழுவதும் பட்டா மாறுதல் முகாம் நடத்த வேண்டும், என்றார்.

100 நாட்கள் வேலைத்திட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், விவசாயிகள் வாங்கிய கடனுக்காக ஆவணங்களை வாங்கி கொண்டு பல இடங்களில் விவசாயிகளின் பெயரில் கடன் வாங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வயலில் மேயும் மாடு, பன்றிகளை அடைக்க மாட்டுப்பட்டி அமைத்து தர வேண்டும். காவிரி பாலத்தின் வேலையை விரைந்து முடிக்க வேண்டும். 100 நாட்கள் வேலையாட்களை விவசாய பணிக்கு திருப்பி விட வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து விவசாய மின் இணைப்பு, நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.


Next Story