ராணிப்பேட்டை மாவட்டத்தில் 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 34 இடங்களில் நாளை முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 34 இடங்களில் நாளை முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில், சொர்ண வாரி பருவத்தில் சாகுபடி செய்த நெல் கொள்முதல் செய்வதற்காக 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது.
அதன்படி, வேடந்தாங்கல், சிறுவளையம், அகவலம், இலுப்பை தண்டலம், நெமிலி, பனப்பாக்கம், சயனபுரம், மகேந்திரவாடி, களத்தூர், காவேரிப்பாக்கம், கொடைக்கல், குன்னத்தூர், மருதாலம், கூத்தம்பாக்கம், வாங்கூர், சூரை, கரடிகுப்பம், சோளிங்கர், கீழ் வீராணம், பானாவரம், ரங்காபுரம், தென்கடப்பந்தாங்கல், கல்மேல்குப்பம், கூராம்பாடி, முகுந்தராயபுரம், சுமைதாங்கி, கொண்ட குப்பம், குப்படிசாதம், அரும்பாக்கம், வணக்கம்பாடி, தக்கோலம், அனந்தாபுரம், தணிகை போளூர் மற்றும் வேடல் ஆகிய 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
பதிவுசெய்ய வேண்டும்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் அசல் அடங்கல் ஆவணங்களுடன் சென்று முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர், விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவு உறுதி செய்ததும் சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.
தேதி, நேரம் ஒதுக்கப்படும்
பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் முழுமையாக சரி பார்க்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் கொண்டு செல்ல வேண்டும்.
நெல் விற்பனை செய்ய வரும் போது நேரடி கொள்முதல் நிலையத்தில் பதிவுகள் மேற்கொண்ட ஆவணங்களுடன் சென்று அதற்கான நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம், சான்றுகள் பெறுவதில், நெல் கொள்முதல் செய்யும்போது தேவையற்ற காலதாமதம் ஏதும் ஏற்பட்டால் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 8807825796 எனற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.