சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு-விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை


சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு-விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை
x

சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை

நேரடி நெல் விதைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாரங்களிலும், அரிமளம் வட்டாரத்தில் ஏம்பல் பிர்காவிலும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளது. இந்த மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து, நிலத்தை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

நேரடி நெல் விதைப்பில், நாற்றங்கால் அமைத்து பராமரிக்க வேண்டிய தேவை இல்லாததால், இதற்கான பராமரிப்பு செலவு, நீர் செலவு, தொழிலாளர் செலவினம் குறைந்து, விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.

விதை நேர்த்தி

விதைக்கும் கருவி மூலம் விதைக்க, ஏக்கர் ஒன்றுக்கு 16 கிலோவும், நேரடியாக கை விதைப்பிற்கு, ஏக்கர் ஒன்றுக்கு 30 கிலோ விதையும் போதுமானது. தொடக்க காலத்தில் நிலவும் வறட்சியை தாங்கி, பயிர் வளர, ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசல் கொண்டு, விதைகளை கடினப்படுத்தி விதைக்கலாம். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் கொண்டு, விதை நேர்த்தி செய்து, விதைகள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

நேரடி நெல் விதைப்பில், குறைந்த பட்சம் 50 நாட்கள் வரை களைகள் இல்லாத சூழல் அவசியம். எனவே களை மேலாண்மையில் கவனம் செலுத்தி, பயிரில் களைச்செடி ஏதுமின்றி பராமரித்து வர வேண்டும்.

தொழு உரம்

நேரடி நெல் விதைப்பு வயல்களில், வரப்பு பயிராக, வரப்புகளில் ஏக்கருக்கு 2 கிலோ துவரை அல்லது உளுந்து விதைகளை விதைப்பு செய்யலாம். இதனால் தனியாக, சாகுபடி செலவு ஏதுமின்றி, பயறு மகசூல் கிடைக்கிறது. தழைகள் ஆடு, மாடுகளுக்கு சிறந்த புரதச்சத்து மிகுந்த தீவனமாகவும் பயன்படுகிறது. விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கிறது.

நேரடி நெல் விதைப்பில், விதைகளை விதைப்பிற்கு முன்னதாக, அசோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை தலா 1 பொட்டலம் (200 கிராம்) வீதம் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன், கலந்து தேவையான அளவு அரிசிக்கஞ்சியுடன் கலந்து, நிழலில் உலர்த்தி, விதைக்கலாம். ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், கடைசி உழவில் இட்டு, நிலத்தை சமப்படுத்தி, விதைப்பு செய்ய வேண்டும்.

ரசாயன உரம்

மண்பரிசோதனை ஆய்வு முடிவின்படி, ரசாயன உரம் இடுவது அவசியம். மண்பரிசோதனை செய்ய இயலாத நிலையில், பொது பரிந்துரையாக ஏக்கர் ஒன்றுக்கு 60 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து, 24 கிலோ சாம்பல் சத்தும் இடலாம். பரிந்துரைக்கப்படும் அளவில் முழு அளவு மணிச்சத்தினையும், பாதியளவு சாம்பல் சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். நேரடி நெல் விதைப்பில், அடியுரமாக தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலுரமாக தழைச்சத்து உரத்தை, விதைத்த 20, 40, 60, 90-ம் நாளிலும், 10 சதவீதம் பூ தோன்றும் நிலையிலும் பிரித்து இட வேண்டும். 90-ம் நாளில், தழைச்சத்து உரத்தோடு, மீதி பாதி சாம்பல் சத்து உரத்தினையும் சேர்த்து இட வேண்டும்.

நேரடி நெல் விதைப்பில், 5 கிலோ நெல் நுண்ணூட்ட சத்தினை, தேவையான அளவு மணலுடன் கலந்து, விதைத்தவுடன் ஒரு ஏக்கர் பயிரில் மேலாக இட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story