தவுட்டுப்பாளையத்தில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் ஆய்வு


தவுட்டுப்பாளையத்தில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் ஆய்வு
x

தவுட்டுப்பாளையத்தில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

கரூர்

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் வசித்து வந்த வீடுகளுக்குள் காவிரி ஆற்று வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் 120 குடும்பங்களை சேர்ந்த 323 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களை தவுட்டுப்பாளையம் ஈ.வெ.ரா. மண்டபம் மற்றும் அரசு பள்ளி எதிரே உள்ள கிராம சேவை மைய கட்டிடம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் வாங்கல் வட்டார சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் தலைமையில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா, வாங்கல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சத்தியேந்திரன் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவந்தனர்.

இந்நிலையில் சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இணை இயக்குனர்கள் டாக்டர் நிர்மல்சன், டாக்டர் சித்ரா ஆகியோர் கொண்ட குழுவினர் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதையும், வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து ஈ.வெ.ரா. மண்டபம் மற்றும் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றுவந்த சிறப்பு மருத்துவ முகாமை திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்தார். அப்போது கரூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், புகழூர் தாசில்தார் மோகன்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story