கோடையின் வெப்பத்தை தணிக்க திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
கோடையின் வெப்பத்தை தணிக்க நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருவட்டார்:
கோடையின் வெப்பத்தை தணிக்க நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் கடுமையாக உள்ளது. அதே நேரத்தில் மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் சற்று கூடுதல் தண்ணீர் கொட்டுகிறது. அதே சமயத்தில் மற்ற இடங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. எனவே விடுமுறை தினமான நேற்று வெப்பத்தை தணிக்க அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று டிக்கெட் வாங்கி அருவிக்கு சென்றனர். அங்கு அருவியிலும் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்து சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.
இதுபோல் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பு அணையில் படகு சவாரி செய்தனர். அங்கு கோதையாற்றின் இருகரையிலும் உள்ள இயற்கை எழில் மிகு காட்சிகளை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் திற்பரப்பு பகுதியில் இளநீர், நுங்கு மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யும் ஏராளமான தற்காலிக கடைகள் முளைத்துள்ளன. இவற்றில் வியாபாரம் களை கட்டியது.
மாத்தூர் தொட்டிப்பாலம்
இதேபோல் மாத்தூர் தொட்டி பாலத்திலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் பாலத்தில் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். சிலர் பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் இங்கு குறைந்த விலையில் கிடைக்கும் அன்னாசி, பலாப்பழம் போன்றவற்றை வாங்கி உண்டனர். இதுபோல் கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.